

திருப்பத்தூர்: ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்கம் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கியும் வளர்ச்சிப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும், சேதமடைந்து வரும் அணையை சீரமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியில் ‘ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்கம்’ 2,738 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்த அணை உள்ளது.
இந்த அணையின் நீர்தேக்க கொள்ளளவு 112.20 மில்லியன் கன அடியாகவும், நீர்பிடிப்பின் பரப்பளவு 216.50 ஏக்கரும், நீர்வரத்தின் மொத்த பரப்பு 20.39 சதுர மைல்களாக உள்ளன. உபரி நீர் வெள்ள அளவு விநாடிக்கு 14,927 கன அடியாக உள்ளது. முழு நீர் தேக்க நீர்மட்ட அளவு 499 மீட்டராக உள்ளது. பிரதான கால்வாயின் நீளம் 3,780 மீட்டராகவும், கிளை கால்வாய்களின் நீளம் 14,220 மீட்ட ராகவும் உள்ளது.
ஆண்டியப்பனூர் அணை முழுமையாக நிரம்பினால் 9 ஏரிகளும், 5025.22 ஏக்கரும் பாசன வசதி பெறும். இதன் மூலம் 6,457 டன்கள் கூடுதல் உணவு உற்பத்தி கிடைக்கும். அணையின் பிரதான கால்வாயின் மொத்த நீளம் 3,630 மீட்டரும், கால்வாயின் அடிமட்ட அகலம் 1.20 மீட்டராகவும், நீரின் வேகம் விநாடிக்கு 0.724 மீட்டராகவும் உள்ளது. அணையில் 5 நேரடி பாசன மதகுகள் உள்ளன.
இதில் தண்ணீர் வெளி யேறும் அளவு 27.58 கன அடியாக உள்ளது. கனமழை காரணமாக இதுவரை 9 முறைக்கு மேல் ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியிருந்தாலும், ஒரு முறை கூட பாசனத்துக்காக அணை திறக்கப் படவில்லை. அதேபோல, அணையை கட்ட இடம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையும் இதுவரை வழங்க வில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஆண்டியப்பனூர் அணை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆண்டியப்பனூர் அணையை திறந்து வைத்தார். அணைக்கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கடந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் அணையின் கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளன.
மதகுகளும் பழுதடைந்து காணப்படுகின்றன. திருப்பத்தூரில் இருந்து ஆண்டியப்பனூர் அணைக்கு செல்லும் சாலை 3 கி.மீ., தொலைவுக்கு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த பழனிசாமி ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்க அணை சுற்றுலா தலமாக மாற்றப்படும் என அறிவித்து, அதற்காக ரூ.467.46 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து, அணைப்பகுதியில் சிறுவர் பூங்கா, நீர் ஊற்று மையம், நடைபாதை வசதி, பூந் தோட்டம், விளையாட்டு உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதற்கான பணிகள் ஆமை வேகத்தில் தொடங்கியதாலோ என்னவோ தற்போது அந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளும் சிதிலமடைந்து, சிறுவர் விளையாடி மகிழும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகின்றன.
ஆண்டியப்பனூர் அணையில் போதிய பராமரிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் வருகையும் நாளுக்கு நாள் குறைந்துள்ளது. வார இறுதி நாட்களில் கூட சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளதால் ஆண்டியப்பனூர் அணை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி அணை கலையிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, ‘‘ திருப்பத்தூர் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் ஆண்டியப்பனூர் அணையும் ஒன்று. பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட அணையை சரிவர பராமரிக்காததால் தற்போது மதுகுடிப் போரின் பிடியில் அணை சிக்கியுள்ளது. மேலும், பாலியல் ரீதியான முகம் சுழிக்கும் செயல்களும் இங்கு அரங்கேறி வருவதால் குழந்தைகளும், பெண்களும் அணையை சுற்றிப் பார்க்க வர தயக்கம் காட்டுகின்றனர்.
எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக், காலி பாட்டில்கள், உணவு கழிவு, இறைச்சி கழிவுகள் சிதறிக்கிடக்கின்றன. சுற்றுலா பயணிகளை கவர அமைக்கப்பட்ட புல் தரையில் ஆடு, மாடுகளும் மேய்கின்றன. இதை கவனிக்கக்கூட பணியாளர்கள் இல்லை. அணையை சுற்றுலா தலமாக்கும் முயற்சியும் பாதியில் நிற்கிறது.
இதுவரை செய்யப்பட்ட பணிகளும் சேதமடைந்து, விளையாட்டு உபகரணங்கள் உடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. மேலும், அணை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குழந்தை களுக்கான பூங்கா, நீரூற்றுகள், விளையாட்டு உபகரணங்கள், இணைப்புச் சாலை, கழிவறை, பாதுகாப்பு தடுப்பு கம்பிகள், மணி மண்டபம், பயணிகள் ஓய்வறை ஆகியவையும் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.
மதகுகள் மற்றும் அணையின் பாசன கால்வாயை சீரமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும். பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்கி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘ அணை நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் பாசன வசதிக்காக திருப்பி விடப்படுகிறது. மேலும், அணையை சுற்றுலா தலமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளன’’ என்றனர்.