“காமராஜர் போல எளிமை, நேர்மை...” - உம்மன் சாண்டிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி புகழஞ்சலி

உம்மன் சாண்டி
உம்மன் சாண்டி
Updated on
1 min read

சென்னை: கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பெருந்தலைவர் காமராஜரைப் போல எளிமை, நேர்மை, தூய்மையாக அரசியல் பணி மேற்கொண்டு, கேரள மாநில முதல்வராக இருமுறை பொறுப்பேற்று அப்பழுக்கற்ற அரசியல் வாழ்க்கை மேற்கொண்ட உம்மன் சாண்டி காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

மாணவர் காங்கிரஸ் தலைவராக, இளைஞர் காங்கிரஸ் தலைவராக, தொழிற்சங்கத் தலைவராக, கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பல்வேறு தளங்களில் பணியாற்றி இயக்கத்தின் வளர்ச்சிக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சினைகளை புரிந்து அவைகளை தீர்த்து வைப்பதில் சிறப்பான பணியை செய்தவர்.

காங்கிரஸ் தலைமை மீது மிகுந்த பற்று கொண்டு, கட்டுப்பாடு மிக்க சிப்பாயாக, மக்கள் தொண்டராக பணியாற்றிய உம்மன் சாண்டி மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in