Published : 18 Jul 2023 04:14 AM
Last Updated : 18 Jul 2023 04:14 AM

அமைச்சர் பொன்முடி இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் - வழக்கறிஞர் பேட்டி

சென்னை: அமைச்சர் பொன்முடி இன்று (18.07.23) மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் கொடுத்துள்ளது என்று அவரின் வழக்கறிஞர் பேட்டியளித்துள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கிய விசாரணை நள்ளிரவை கடந்த நீடித்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன்பின் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அளித்துள்ளது என்று அவரின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

விசாரணை நிறைவுபெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் சரவணன், "அமைச்சர் பொன்முடியின் வயது 72. அவரின் வயதையும், உடல்நலத்தையும் கருத்தில் கொள்ளாமல் மனிதாபிமானம் இல்லாமல் விசாரணை நடத்துவதாக கூறி நடந்துகொண்டது அமலாக்கத் துறை. 72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரிப்பது மனித உரிமை மீறல். விசாரணை அமைச்சர் பொன்முடிக்கு மனஉளைச்சல் மற்றும் உடல் உளைச்சலை கொடுத்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையும் மீறி அமலாக்கத் துறை மனிதத்தன்மையற்று செயல்பட்டது. 2007ல் நடந்த வழக்குக்கு 2023ல் விசாரணை செய்வோம் என்கிறது அமலாக்கத் துறை. விசாரணையை நாளை காலை நடத்தினால் என்ன? குடி மூழ்கிவிடுமா அல்லது ஆதாரங்கள் அழிந்துவிடுமா. இது அமலாக்கத் துறை அலுவலகமா அல்லது சித்ரவதை கூடமா என்று தெரியவில்லை.

அமலாக்கத் துறையின் கண்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு நடந்த திமுக அமைச்சர்களின் வழக்குகள் தெரியுமா... அதிமுக அமைச்சர்களின் வழக்குகள் நிலுவையில் இருப்பது அமலாக்கத் துறையின் கண்களுக்கு தெரியாதுபோல. இன்றைய விசாரணை முடிந்து அமைச்சர் வீடு திரும்பியுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் கொடுக்கப்பப்பட்டுள்ளது.

கொள்கை ரீதியாகவும், அரசு நிர்வாக ரீதியாகவும் ஆளுநர் ரவியை தொடர்ந்து எதிர்ப்பதால்தான் அமைச்சர் பொன்முடியை குறி வைத்துள்ளார்கள். ஆளுநர் டெல்லிக்குச் சென்ற ஒருவாரத்தில் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. அமலாக்கத் துறை கேட்க வேண்டியது ஒன்றுதான், 2007ல் நடந்த வழக்குக்கு 2023ல் வந்து தேடினால் எந்த ஆவணங்கள் கிடைக்கும்.

2024 தேர்தலுக்காக விடுக்கப்பட்ட மிரட்டல்தான் இது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக திமுகவுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல். இதற்கு முதல்வர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். எனினும் அமலாக்கத் துறை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதில் அளித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் அறிவிப்பார்." என்று வழக்கறிஞர் சரவணன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x