

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஆனிவார ஆஸ்தானம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் தங்கவாசல் அருகே உள்ள கருடன் சன்னதியில் சர்வபூபால வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. இரவு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் ஆகியோர் பூப்பல்லக்கில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஏழுமலையான் கோயிலில்ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை கொண்டு வந்து சுவாமிக்கு சமர்ப்பிப்பதும் ஒரு ஐதீகம். அதன்படி நேற்று ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் பட்டு வஸ்திரங்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, செயலர் மணிவாசகம், அறநிலைத் துறை ஆணையர் முரளிதரன், ஸ்ரீரங்கம் தேவஸ்தான இணை ஆணையர் சிவ்ராம் குமார், அர்ச்சகர் ஸ்ரீநிவாஸ் ராகவ பட்டர் உடன் இருந்தனர்.