

விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற கிராமங்களால் சூழப்பட்ட, கலாச்சார, பண்பாட்டை விட்டு விலகாத, கல்வி, இலக்கியம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்த தொலைநோக்கு சிந்தனையாளர்கள் பலரால் நிர்வாகிக்கப்பட்ட பொள்ளாச்சி நகராட்சி தனது 100-வது வயதில் விரைவில் காலடி எடுத்து வைக்க உள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமைமிக்கதாக அறியப்பட்ட சுப்பிரமணியர் சுவாமி கோயில், யானை முதல் ஆடு வரை பல வகையான கால்நடைகளின் வர்த்தகம் நடைபெற்ற தென்னிந்தியாவின் மிகப்பெரிய கால்நடைச்சந்தை ஆகியவற்றுடன் ‘பொழில்வாய்ச்சி’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட சிறுநகர்தான் பொள்ளாச்சி ஆகும்.
ஜமீன்சமத்தூர், ஜமீன் ஊத்துக்குளி, ஜமீன் ராமபட்டணம், ஜமீன்புரவிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஜமீன்களின் ஆளுகையில் இருந்த நீர்வளமும், நிலவளமும் மிக்க இந்த பகுதியில், விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட விவசாயத் தொழிலாளர்களில் வியர்வையில் விளைந்த விளைப்பொருட்களின் வியாபாரத்தில் ‘பொள்ளாச்சி சந்தை’ கொடிகட்டிப் பறந்தது.
பின்னர், ஆங்கிலேயர்கள் காலத்தில் வால்பாறை மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டங்களுக்கு தேவையான தொழிலாளர்கள், அவர்களுக்கு தேவையான பொருட்களையும் கொண்டு செல்லவும், மலையில் இருந்து தேயிலை, காபி, தேக்கு, சந்தனம், மிளகு உள்ளிட்ட பொருட்களை கீழே கொண்டு வந்து நாட்டின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவும் அமைக்கப்பட்ட ரயில்பாதையால் இந்நகரம் வளர்ச்சி அடையத் தொடங்கியது.
1920-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாணை 763–ன்படி, 4 சதுர மைல் பரப்பளவும், 8693 பேர் உள்ளடங்கிய மக்கள் தொகையும் கொண்ட பொள்ளாச்சி நகர், இரண்டாம் நிலை நகராட்சியாக தேர்வு பெற்றது. 1934-ம் ஆண்டு பொள்ளாச்சி நகருக்கு தேசத்தந்தை காந்தியின் வருகை அமைந்தது.
இது பொள்ளாச்சி நகரில் இருந்த தேசபக்தர்களிடையே விடுதலை போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
சுதந்திர இந்தியாவில் 1953-ல் முதல்நிலை நகராட்சியாகவும், 20 ஆண்டுகளுக்கு பின்னர் 1973-ல் தேர்வுநிலை நகராட்சியாகவும், அடுத்த பத்தாண்டுகள் கழித்து, 1983-ல் சிறப்புநிலை நகராட்சியாகவும் தரம் உயர்வு பெற்றது.
பொள்ளாச்சி நகராட்சி விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள நிலையில், தற்போது 13.87 சதுர கி.மீ.பரப் பளவில் அமைந்துள்ள 36 வார்டுகளில் சுமார் 1 லட்சம் மக்கள் தொகையும், வடுகப்பாளையம், டி.கோட்டம்பட்டி ஆகிய கிராமப்பகுதிகளையும் கொண்ட பொள்ளாச்சி நகரில் தற்போது நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டம், நகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகளின் விரிவாக்கம், உடுமலை – பொள்ளாச்சி – கோவை நான்கு வழிச்சாலைப் பணிகள், நகரப் புறவழிச் சாலைப் பணிகள், பொள்ளாச்சி - கோவைக்கு மாற்றுப் பாதை, குடிநீர் திட்டம் விரிவாக்கம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தரம் மேம்பாட்டுப் பணிகள், பல கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் காய்கறி சந்தைக்கு நவீன கட்டிடம் என படிப்படியாக பல்வேறு வளர்ச்சிகளை பெற்று வருகிறது.
பதப்படுத்தப்பட்ட இளநீர், தேங்காய், மதிப்புக் கூட்டப்பட்ட தென்னைநார் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி ஆகியவற்றால் ஆயிரம் கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி வர்த்தகம் நடைபெறும் பொள்ளாச்சி நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொள்ளாச்சி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு அறிவிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.