Published : 18 Jul 2023 07:23 AM
Last Updated : 18 Jul 2023 07:23 AM

தமிழ்நாடு தினம் | மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு ஆக உருவான வரலாறு

கோப்புப்படம்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு `மெட்ராஸ் பிரசிடென்ஸி' மெட்ராஸ் மாகாணமாக மாறியது. 1956 நவம்பர் 1-ம் தேதி மதராஸ் மாநிலம் உருவானது. 1967 ஜூலை 18-ம் தேதி மதராஸ் மாநிலம், அதிகாரப்பூர்வமாக `தமிழ்நாடு' என்று பெயர் பெற்றது.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், தங்களது மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தினத்தை, அவர்களது மாநில தினமாகக் கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழ்நாடு எந்த மாநிலத்திலிருந்தும் பிரிக்கப்படாத மாநிலமாக இருந்ததாலும், முன்பிருந்த சென்னை மாகாணத்திலிருந்தே வேறு சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டதாலும், மாநில தினம் என்று எந்த நாளும் குறிப்பிடப்படாமலேயே இருந்தது.

இந்நிலையில், 2019-ல் ‘இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு மாநில தினமாகக் கொண்டாடப்படும்’ என்ற அறிவிப்பை அப்போதைய அதிமுக அரசு வெளியிட்டது.

2021-ம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற பிறகு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “1956 நவம்பர் 1-ல் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன.

2019-ம் ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும், நவம்பர் 1-ம் தேதியை எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் கருத வேண்டுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி, பேரறிஞர் அண்ணாவால் 1967 ஜூலை 18-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதை ஏற்று, ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட அரசாணை வெளியிடப்படும்" என்று சட்டபேரவையில் அறிவித்தார்.

முன்னரே, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நவம்பர் 1-ம் தேதியை தங்களது மாநில தினமாகக் கொண்டாடி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமான தெலங்கானா மாநிலம், தனது மாநில தினத்தை ஜூன் 2-ம் தேதி கொண்டாடி வருகிறது.

அன்றைய தமிழ்நாடு என்பது, கடலோர ஆந்திரா, ராயலசீமா, வட கேரளாவின் மலபார் பகுதி மற்றும் தென்கனராவின் பெல்லாரி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். 1953-ல்கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகள் ஆந்திர மாநிலமாகப் பிரிக்கப்பட்டன.

தென்கனரா மற்றும் பெல்லாரி மாவட்டங்கள் மைசூரு மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. 1956-ல் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலமாக, மாநிலத்தின் எல்லைகள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்பட்டன.

தமிழ் பேசும் பகுதியான கன்னியாகுமரி, முன்பு திருவிதாங்கூர்- கொச்சியின் ஒரு பகுதியாக இருந்த மெட்ராஸ் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1950 ஜனவரி 26-ம் தேதி இந்தியா புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, குடியரசாக உருவெடுத்தபோது, 28 மாநிலங்கள் இந்தியாவில் இருந்தன.

ஒவ்வொரு மாநிலத்தின் பெயரும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, மாநிலங்கள், இந்திய யூனியனிலிருந்து பிரிந்து செல்ல முடியாது. ஆனால், தங்களுக்குள் பிரிந்துகொள்ளலாம், சேர்ந்துகொள்ளலாம். மாநிலங்களின் எல்லைகள்கூட மாற்றி அமைக்கப்படலாம். அதேபோல, மாநிலத்துக்கு புதிய பெயர் சூட்டலாம் என்று மட்டுமே சட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

1956-ல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்டத் திருத்தத்தின் மூலம் சென்னை மாகாணத்தின் மேற்கு கடற்கரைப் பகுதிகள் கேரளாவுக்கும், கர்நாடகத்துக்கும் பிரிந்து சென்றன. வட பகுதி ஆந்திர மாநிலத்துக்குச் சென்றது. எஞ்சிய நிலப்பகுதி சென்னை மாநிலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

சங்கரலிங்கனார்

சங்கரலிங்கனார் உண்ணாவிரதம்

சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி, தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனக் கோரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1957-ல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த அவர், உயிரிழந்தார். அதன் பிறகு, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தீவிரமடைந்தது. பின்னர், தமிழில் மட்டும் ‘தமிழ்நாடு’ என்றும், ஆங்கிலத்தில் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றும்குறிப்பிடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. 1961 பிப்ரவரி 24-ல் சட்டப்பேரவையில் இது அறிவிப்பாக வெளியிடப்பட்டது.

1967-ல் சென்னை மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் `தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் அறப்போராட்டத்தைக் கவுரவிக்கும் வகையில், மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டுமென ஒருமித்த குரலில் வலியுறுத்தின.

1967-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, மாநிலத்துக்கு `தமிழ்நாடு' என்று பெயரைச் சூட்டத் தீர்மானித்தது. அதன்படி, 1967 ஜூலை 18-ம் தேதி அப்போதைய முதல்வர் சி.என்.அண்ணாதுரை, இது தொடர்பான தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

அப்போது பேசிய அண்ணா, "பெயர் மாற்றம் செய்வதாலேயே, தமிழ்நாடு தனி நாடாகிவிடாது. இந்தியப் பேரரசின் பகுதியாகவே தமிழ்நாடு இருக்கும். இதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது" என்றார்.

மேலும், "தமிழ்நாடு என்று பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேறிய, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில் `தமிழ்நாடு வாழ்க' என்று நாம் வாழ்த்துவோம்என்று கூறிவிட்டு, `தமிழ்நாடு' என 3முறை குரல் எழுப்பினார் அண்ணா.அப்போது அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் `வாழ்க' என்று கோஷமெழுப்பினர்.

தென்னிந்திய மாநிலங்களில் சிறப்பு வாய்ந்தது தமிழ்நாடு. நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு தினம்’ கடைப்பிடிக்கப்படும் என்று 2021 அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x