

சென்னை: அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்படும் சோதனை மூலம் திமுகவுக்கு அமலாக்கத் துறை பாடம் புகட்டிஉள்ளது என்று முன்னாள் அமைச்சர்ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இயற்கை வளங்களை சுரண்டி, சூறையாடி இயற்கையை அழித்தவர்களுக்கு இந்த சோதனை ஒரு நல்ல பாடமாக அமையும். 2 லட்சம் டன்னுக்கு மேல் இயற்கை வளங்கள் இதுவரை சூறையாடப்பட்டுள்ளன. இதுதவிர சில வழக்குகளில் திமுக வழக்கறிஞர்களே, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாக ஆஜராகி, சாட்சிகளை நீர்த்துப்போக செய்து, வழக்கில் இருந்து விடுதலையாக்க வைத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டம்: பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து கூட்டம் நடத்தும்போது, அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக கூறுகின்றனர். சோதனைக்கும், கூட்டதுக்கும் என்ன சம்பந்தம்? வழக்குகள் போடப்பட்டால், தைரியமாக நீதிமன்றத்தில் சந்திக்கிறோம், எதிர்கொள்கிறோம் என்று கூறினால்கூட பரவாயில்லை. அதைவிடுத்து பதுங்குவது, பழிவாங்கல் என அறிக்கை விடுவது, அமலாக்கத் துறையை விமர்சிப்பது என ஊழலே செய்யாதவர்களாக நடிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை சரியான நடவடிக்கையைதான் மேற்கொண்டுள்ளது. பணத்தை கோடி கோடியாக குவித்துள்ள திமுக அமைச்சர்களுக்கு, வயிற்றில் புளியை கரைக்கும் விஷயமாகத்தான் இது இருக்கும். திமுகவுக்கு சரியான பாடத்தைதான் இந்த சோதனை கற்பித்துள்ளது. இவ்வாறு முன்னாள் அமைச்சர்ஜெயக்குமார் கூறினார்.