

மதுரை: மதுரை கீரைத்துறை பகுதியில் வசிப்பவர் ஜாகீஸ். கேரளாவைச் சேர்ந்த இவர் தெற்கு மாசி வீதியில் டி.ஜி.எம் என்ற பெயரில் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்துகிறார்.
இங்கு வாஷிங் மிஷின் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கவர், பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று காலை கம்பெனியை திறக்க ஊழியர்கள் சென்ற போது உள்ளே இருந்து புகை வெளியேறியது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத் உத்தரவின் பேரில், நிலைய அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் இருப்பு இருந்ததால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதிக வர்த்தக நிறுவனங்கள் கொண்ட பகுதி என்பதால் 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து தெற்குவாசல் போலீஸார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பூமி நாதன், துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் பார்வை யிட்டனர்.