

மானாமதுரை: ராமநாதபுரம் மின்வாரியத்துடன் இணைக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 20 கிராமங்கள், தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை, எம்.கரிசல்குளம், வன்னிக்குடி, சோமாத்தூர், சின்ன கண்ணனூர், புலிக்குளம், மானங்காத்தான் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மின்வாரியம் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
அப்பகுதிகளில் பம்புசெட் மோட்டார்களை இயக்க முடியாததால், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. குடிநீர் விநியோகமும் தடைப் படுகிறது. இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப் படுகின்றனர். கடை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், பார்த்திபனூர் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும், சிவகங்கை மாவட்டம் என்பதால் மின்வெட்டை சரி செய்வதில் மெத்தனம் காட்டுகின்றனர்.
இப்பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்தாலும், தற்போது அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் தங்களது பகுதிகளை, மானாமதுரை மின்வாரியத்துடன் இணைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மானாமதுரை மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியத்துடன் இணைக்கப்பட்ட கிராமங்களை, மானாமதுரை மின்வாரியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தனர்.