Published : 18 Jul 2023 04:05 AM
Last Updated : 18 Jul 2023 04:05 AM
நாகப்பட்டினம்: நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெறவிருந்த நிலையில், திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் இருந்த 5 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் எரிந்து சேதமடைந்தன.
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் நாள் என்பதால், மனுக்கள் அளிப்பதற்காக மாற்றுத் திறனாளிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது, ஆட்சியர் அலுவலக 3-வது தளத்தில் இயங்கி வரும் தமிழக அரசு கேபிள் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த தீ, அறை முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தீப் பற்றி எரிவதைக் கண்ட அதிகாரிகள், ஊழியர்கள், குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் அலறியடித்துக்கொண்டு, வெளியே ஓடினர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்துக்கான மின் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு, அலுவலக தரைத்தளம் உட்பட 3 தளங்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்த நாகை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் தமிழக அரசு கேபிள் அலுவலக சேமிப்புக் கிடங்கு அறையில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த 5 ஆயிரம் செட் டாப் பாக்ஸ் கருவிகளில் பெரும்பாலானவை எரிந்து சேதமடைந்தன.
தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்ததும், ஆட்சியர் அலுவல முதன்மை கூட்டரங்கத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை அலுவலகத்தில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வெளிப்பாளையம், நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் உடனடியாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT