

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக 40 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 6.5 கிலோ எடையுள்ள கர்ப்பப்பை நீர்க் கட்டியை மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக நேற்று அகற்றினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேலச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி மகேஸ்வரி(40). வயிறு வீக்கம் மற்றும் வயிற்று வலியால் கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடைய வில்லை. வயிற்று வலி நாளுக்கு நாள் அதிகரித்ததால் உணவு உட்கொள்வதில் சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகேஸ்வரி கடந்த 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை, சிறப்பு மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில், இவரது வயிற்றில் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருப்பது உறுதியானது. இதனை, அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற சிறப்பு மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து மகேஸ்வரிக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை நடைபெற்றது. மயக்கவியல் துறைத் தலைவர் மருத்துவர் பால முருகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மகேஸ் வரிக்கு இரண்டு வகையான மயக்க மருந்தை செலுத்தினர். மகப்பேறு துறைத் தலைவர் மருத்துவர் அருமைக் கண்ணு, மருத்துவர் ஜெயந்தி தலைமை யில் மருத்துவர்கள் பவானி, பாலகிருஷ்ணா, யுவஸ்ரீ, வித்யாலட்சுமி, செவிலியர்கள் அலமேலு, பாண்டியன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.
அப்போது, மகேஸ்வரி வயிற்றில் இருந்து 6 கிலோ 500 கிராம் எடையுள்ள நீர்க்கட்டி அகற்றப்பட்டது. இரண்டரை மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மருத்துவக் குழுவினரை கல்லூரி முதல்வர் மருத்துவர் அரவிந்த், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலசுந்தரமணியன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் அரவிந்தன் உள்ளிட்டோர் பாராட்டினர்.