Published : 17 Nov 2017 09:49 AM
Last Updated : 17 Nov 2017 09:49 AM

தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.10,513 கோடியை அரசு வழங்கியிருந்தால் புதிய பேருந்துகளை வாங்காதது ஏன்? - தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் கேள்வி

போக்குவரத்துக் கழகங்களுக்கு அதிமுக அரசு ரூ.10,513 கோடி வழங்கியிருப்பது உண்மையானால் எந்த பேருந்துகளும் வாங்காமல் இருந்தது ஏன் என தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பணிமனைகள், பேருந்து நிலையங்கள், அலுவலகக் கட்டிடங்கள், காலிமனைகள் ஆகியவற்றை ரூ.2,496 கோடிக்கு அடகு வைத்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடத்தப்படுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒருவர் பெற்ற தகவல்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பணிமனைகள், பேருந்துகள், சொத்துகளை அடகு வைத்து பணம் பெறப்படுவதையும் தொழிலாளர்களுடைய ஓய்வுகாலப் பலன்களை வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதையும், பழுதடைந்த பேருந்துளால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

திமுக ஆட்சியில் 13 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. 43 ஆயிரம் தொழிலாளர்கள் புதியதாக வேலைக்கு எடுக்கப்பட்டனர். ஊதிய உயர்வு ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு, ஊழியர்களுக்கு 60 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.

போக்குவரத்துக் கழகங்களுக்கு அதிமுக அரசு ரூ.10,513 கோடி வழங்கியிருப்பதாக அமைச்சர் சொல்கிறார். அது உண்மையானால் எந்தப் பேருந்துகளும் வாங்காமல், எந்த ஒரு ஊதிய உயர்வும் வழங்காத நிலையிலும் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் தங்கள் பலன்களுக்காக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ரூ.10,513 கோடி வழங்கப்பட்டிருந்தால் சொத்துகளை அடமானம் வைக்க வேண்டிய அவசியம் என்ன? 1.43 லட்சம் ஊழியர்களுக்கு நல்ல குடிநீர் வசதி இல்லை. பேருந்து பராமரிப்பு என்பது முழுமையாக இல்லை. 9 ஆண்டுகளுக்கு மேலாக காலாவதியான பேருந்துகள் 90 சதவீதம் உள்ளன. ஏராளமான விபத்துகளும் ஏற்படுகின்றன. திமுக ஆட்சிக் காலத்தில் டீசல் விலை 40 சதவீதம் உயர்ந்த போதிலும் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 50 சதவீதம் கட்டணத்தை உயர்த்தினர். 2016 செப்டம்பர் 1-ம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வையும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. எனவே, தவறான விமர்சனம் செய்வதை தவிர்த்து தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் நன்மை செய்ய அரசு முன்வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x