Published : 17 Jul 2023 11:20 PM
Last Updated : 17 Jul 2023 11:20 PM
விழுப்புரம்: தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி அலுவலகத்துக்கு சீல் வைக்க அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். அவரது மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீட்டிலும் இந்தச் சோதனை நடந்தப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் இன்று காலை முதல் நடந்த 13 மணி நேரம் சோதனைக்குப் பிறகு, சென்னை நுங்காம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். சிஆர்பிஎஃப் படை வீரர்களின் துணையுடன் பொன்முடி அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் பொன்முடியின் சொந்த வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அவரது மகன் கவுதம சிகாமணியையும் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி அலுவலகத்துக்கு சீல் வைக்க அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட வாய்ப்பு இருப்பதால் அவரின் அலுவலகத்தில் சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரத்தில் சோதனை நிறைவு: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. விழுப்புரம் சண்முகாபுரம் காலனியில் உள்ள பொன்முடி வீடு மற்றும் விழுப்புரத்திலேயே மற்ற இரண்டு இடங்களில் உள்ள அவரின் நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்கள் என 3 இடங்களில் சோதனை நடந்தது வந்தது. இதில் விழுப்புரம் சண்முகாபுரம் காலனியில் உள்ள அமைச்சரின் பொன்முடி வீட்டில் நடந்த சோதனை நிறைவுபெற்றுள்ளது.
காலை 7 மணியளவில் தொடங்கிய அமலாக்கத் துறையினரின் சோதனை கிட்டத்தட்ட 15 மணி நேரத்துக்கு பிறகு தற்போது நிறைவு பெற்றுள்ளது. சோதனையை முடித்துக்கொண்டு நான்கு அதிகாரிகள் புறப்பட்டனர். கைப்பற்ற ஆவணங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அதேநேரம் விழுப்புரத்திலேயே மற்ற இரண்டு இடங்களில் உள்ள அவரின் நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT