கருணாநிதி நினைவாக அமைக்கப்படும் பேனா சின்னம் இடமாற்றமா? - நினைவிடத்திலேயே அமைக்க திட்டம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக வங்கக்கடலில் அமைக்க திட்டமிட்டிருந்த பேனா சின்னத்தை, அவரது நினைவிடத்திலேயே சிறிய அளவில் அமைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து, 134 அடி உயரத்தில், ரூ.81 கோடியில் நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவெடுத்து, தமிழக கடலோர மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெற்றது.

இதையடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் உள்ள கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை கோரியது. பின்னர், நினைவு சின்னம் அமைக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய ஆணையம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, அடுத்தகட்ட பணிகளை தமிழக பொதுப்பணி துறை தொடங்கியது. நினைவிடத்தில் பணிகள் நடப்பதை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் 2 முறை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழலில், வங்கக்கடலில் பேனா சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு, குறிப்பாக முதல்வர்மாற்றிக் கொண்டுள்ளதாகவும், கருணாநிதி நினைவிடத்திலேயே சிறிய அளவில் பேனா சின்னம் அமைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கடந்த 14-ம் தேதி சந்தித்து பேசிய நிலையில் இத்தகவல் வெளியாகி உள்ளதால், அந்த சந்திப்பில் இதுபற்றி ஆலோசனை நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், இதுபற்றி அரசு தரப்பிலோ, பொதுப்பணி துறை தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in