

சென்னை: அதிமுக சார்பில் வரும் ஆக. 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டுக்கான மேடை, முகப்பு ஆகியவற்றை அமைப்பது தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதிமுக சார்பில் வரும் ஆக. 20-ம் தேதி மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெற உள்ளது.
இதையொட்டி, மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு, விழா மலர்க் குழு, கூட்ட அரங்கு அமைப்புக் குழு, விளம்பரம், செய்தித் தொடர்பு மற்றும் நிகழ்ச்சி நிரல் ஒருங்கிணைப்புக் குழு, உணவுக் குழு, தீர்மானக் குழு, வரவேற்புக் குழு,தொண்டர் படைக் குழு, மருத்துவக் குழு என 9 குழுக்களை பழனிசாமி அமைத்திருந்தார்.
இந்நிலையில், மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, 9 குழு நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக, மாநாட்டு முகப்பு மற்றும் மேடையை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து, நிர்வாகிகளுடன் பழனிசாமி விரிவாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பிரபல திரைப்படக் கலை இயக்குநர்கள் மூலம் டெல்லி செங்கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, நாடாளுமன்றக் கட்டிடம் வடிவில் உருவாக்கப்பட்ட மாநாட்டு மேடை மற்றும் முகப்பு மாதிரிகள் கொண்டுவரப்பட்டு, விளக்கிக் காட்டப்பட்டது. அதில் சில மாதிரிகளை பழனிசாமி தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், எஸ்.கோகுல இந்திரா, ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.