

சென்னை: தமிழகத்துக்கான உண்மையான முன்னேற்றத்தை பாமகவால் மட்டுமே கொடுக்க முடியும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பாமகவின் 35-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்,கட்சிக் கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். சென்னையில் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் பாமக தலைவர் அன்புமணிபங்கேற்று, கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே 35 ஆண்டு காலம்பல நன்மைகளை பாமக செய்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்துசாதனை செய்வதுதான் உண்மையான சாதனை. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இது சமூக நீதிக்கான கட்சி. பாமகவால் மட்டும்தான் தமிழகத்துக்கு உண்மையான முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தரமுடியும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘2026-ல்பாமக தலைமையில் தமிழகத்தில் கட்டாயம் கூட்டணி ஆட்சிஅமையும். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். இன்று வரை கூட்டணி குறித்து நாங்கள் எவ்வித நிலைப்பாடும் எடுக்கவில்லை’’ என்றார்.