

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான விசைப்படகில், நாகை நம்பியார் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கசாமி(53), அவரது மகன் ரகு, அசோக் உள்ளிட்ட காரைக்கால், நாகை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேர், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூலை 14-ம் தேதி அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
தொடர்ந்து, நேற்று முன்தினம் மகாபலிபுரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு தத்தளித்ததால், தங்கசாமி தவறி கடலில் விழுந்து நீரில் மூழ்கினார். இதை சற்றும் எதிர்பாராத சக மீனவர்கள், அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காரைக்கால் மீன்வளத் துறை, மீனவக்கிராம பஞ்சாயத்தார் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கடலோர காவல் நிலையம், இந்திய கடலோர காவல் படை ஆகியவற்றுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, காணாமல்போன மீனவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல, கடந்த மாதம் 28-ம்தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல் சீற்றம் காரணமாக தவறி விழுந்து காணாமல்போன நம்பியார் நகர் மீனவர்அஞ்சப்பன் என்பவர் இதுவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.