Published : 17 Jul 2023 05:51 AM
Last Updated : 17 Jul 2023 05:51 AM

ராஜன் வாய்க்காலில் மந்தகதியில் பாலம் கட்டுமானப் பணி - தண்ணீரின்றி 3,000 ஏக்கர் குறுவை பயிர்கள் சேதம்

திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையில் ராஜன் வாய்க்காலில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமானப் பணி

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே ராஜன் வாய்க்காலில் நடைபெற்றுவரும் பாலம் கட்டுமானப் பணிமந்தகதியில் நடைபெற்று வருவதால், 3,000 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டு, குறுவை நெற்பயிர்கள் கருகி சேதமடைந்துள்ளன.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை என்ற இடத்தில், அடைப்பாற்றில்இருந்து ராஜன் வாய்க்கால் பிரிகிறது. இங்கிருந்து கொருக்கை, மேல கொருக்கை, அருந்தவப்புலம், சாலக்கடை, கொக்கலாடி, பாமணி உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 3,000 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் ராஜன் வாய்க்கால் பாசனத்தையே நம்பியுள்ளன.

இந்நிலையில், ராஜன் வாய்க்காலின் தலைப்புப் பகுதியான கொருக்கை கிராமத்தில் சிறிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்பகுதியில் தண்ணீர் செல்வதற்கு ஏற்ப பாலம் விரைந்து கட்டி முடிக்கப்படவில்லை. மாறாக, கட்டுமானப் பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 3,000 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பு செய்துள்ள வயல்களில் முளைவிட்டுள்ள குறுவைப்பயிர்கள் தண்ணீரின்றி கருகியுள்ளன.

ராஜன் வாய்க்காலில் தண்ணீர் வராததால் மேலகொற்கை கிராமத்தில் கருகியுள்ள குறுவை நெற்பயிர்கள்

இதுதவிர, இப்பகுதியில் உள்ளகிராமங்களில் நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டுசெல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பாலம் கட்டுமானப் பணியை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, விரைவுப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க இயலாது எனில், தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள பகுதிகளில் இருக்கும் கட்டுமானப் பொருட்களை அகற்றிவிட்டு, தண்ணீர் செல்லும் வகையில் தற்காலிக ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்தக் கிராமங்களில் சிறு, குறு விவசாயிகள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

இந்தப் பாலம் கட்டுமானப் பணி காரணமாக தண்ணீர் கிடைக்காமல், குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு, இப்பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாலசுப்பிரமணியன், தியாகராஜன் உட்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x