Published : 09 Nov 2017 12:09 PM
Last Updated : 09 Nov 2017 12:09 PM

வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; மத்திய அரசின் சதி எடுபடாது: டிடிவி தினகரன்

சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், சசிகலாவின் உறவினர்கள் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று (நவ.9) காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில், இந்த சோதனைக்குப் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் 150 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை அடையாறில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பல்வேறு கேள்விகளுக்கும் பதில அளித்தார்.

என் வீட்டில் ரெய்டு இல்லை:

"எனது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. காலை 8.30 மணியளவில் அதிகாரி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால், அவரும் சற்று நேரத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். திரும்பி வரலாம், வராமலும் போகலாம்.

புதுச்சேரி அருகே ஆரோவில்லில் உள்ள எனது பண்ணை வீட்டில் இன்று காலை சில அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர்  அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். எங்கள் வீட்டைக் கவனித்துக் கொள்ளும் இருவருமே படிப்பறிவில்லாதவர்கள். அதனால், அங்கு எனது வழக்கறிஞரை அனுப்பியிருந்தேன். ஒருவேளை அதிகாரிகளே அங்கு ஏதாவது ஆவணங்களை வைத்திருந்தாலும் அதையும் கண்டுபிடித்துவிடலாம். வீடு முழுவதும் கேமரா இருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

மத்திய அரசே காரணம்:

எனது ஆதரவாளர்கள் வீடுகளில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதன் பின்னணியில் மத்திய அரசே இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. யார் கொடுத்த தவறான தகவலின் பேரில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடன் நெருக்கமாக இருக்கிறார் என்பதற்காகவே புகழேந்தி வீட்டில் எல்லாம் சோதனை நடத்தி வருகின்றனர். இப்படி சோதனையில் ஈடுபடுபவர்கள், சேகர் ரெட்டி, அன்புநாதன் டைரியில் குறிப்பிட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் சொல்ல வேண்டும்.

மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்:

வருமான வரிச் சோதனையில் ஈடுபட்டு எங்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். ஆனால், இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் அஞ்சிவிடமாட்டேன். எனக்கு 30 வயதாக இருக்கும் போதே நான், சசிகலா எனது தம்பி ஆகியோர் ஒரு வருடம் சிறையில் இருந்திருக்கிறோம். சிறை, சிபிஐ எல்லாம் எங்களுக்குப் புதிதல்ல. என்னை எத்தனை வருடம் சிறையில் போட்டாலும், வெளியில் வந்த பிறகு, அதற்குக் காரணமான கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடாமல் செய்வேன். இருப்பது ஒரு உயிர்; அது ஒருமுறைதான் போகும். எனவே, ரெய்டுகளுக்கு எல்லாம் அஞ்சினால் வாழவே முடியாது.

சதி எடுபடாது..

நானும், சசிகலாவும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே, எங்களை ஒழித்துக்கட்டவே இத்தகைய ரெய்டு நடவடிக்கைகள் எல்லாம் நடத்தப்படுன்றன. 

எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின்னர் இதேபோன்ற ரெய்டுகளால்தான் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. இப்போது 'அம்மா' மறைவுக்குப் பின் எங்களுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது.

நாங்கள் துணிச்சலான, வீரமிக்க மண்ணில், குடும்பத்தில் பிறந்தவர்கள். அம்மாவையே பாதுகாத்தவர்கள். எங்களை அரசியலில் ஈடுபடாமல் செய்ய அரங்கேற்றப்படும் சதிகள் எடுபடாது. எங்களை சிறையில் அடைத்தாலும் வெளியில் வந்து பதிலடி கொடுப்போம். இப்போது எனக்கு 55 வயதாகிறது என்னை 20 வருடங்கள் சிறையில் அடைத்தாலும்கூட 75 வயதில் சிறையில் இருந்து வெளியே வந்து அரசியலில் எடுபடுவேன்.

உலகமே சொல்கிறதே!

நேற்று (புதன்கிழமை) பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு பேசிய தினகரன் மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை விமர்சித்திருந்தார். இதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், "பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி என நான் மட்டும் கூறவில்லை. இந்த உலகமே அதைச் சொல்கிறது. இதற்காக ரெய்டு நடத்தினால் அதற்கு பயப்பட மாட்டேன். இப்போதும் சொல்கிறேன் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியே. மக்களையும், தொழில்துறையும் இத்திட்டம் பாதித்துள்ளது. ஜிஎஸ்டி சாதாரண மக்களையும் வணிகர்களையும் பாதித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x