Last Updated : 28 Nov, 2017 09:44 AM

 

Published : 28 Nov 2017 09:44 AM
Last Updated : 28 Nov 2017 09:44 AM

11 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்: மார்க்சிஸ்ட் கட்சியும் இணைய வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதன்மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ளது.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ‘‘ஆளும் அதிமுகவை தங்கள் அரசியல் நோக்கத்துக்காக பிளவுபடுத்தியும், ஒன்றுசேர்த்தும் பாஜக தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எனவே, ஆர்.கே.நகரில் அதிமுகவை தோற்கடிப்பது அவசியம். எனவே, திமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். ஆதரவு கேட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். மதவாத சக்திகளை வீழ்த்தும் வகையில் அவர்களும் நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புகிறோம்’’ என்றார்.

காங்கிரஸ் எதிர்ப்பால் விலகல்

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய திமுக, கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்தது. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இக்கூட்டணி வென்றது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்வதில் காங்கிரஸ் உறுதியாக இருந்ததால் மன்மோகன் சிங் அரசுக்கு அளித்த ஆதரவை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திரும்பப் பெற்றன. நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அரசுக்கு எதிராக வாக்களித்தன.

இதனால், தமிழகத்தில் திமுகவுடன் இணக்கமாக இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததால் அக்கட்சியுடன் கூட்டணி சேர முடியாத நிலை கம்யூனிஸ்ட்களுக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 2009 மக்களவைத் தேர்தல், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன. 2014 மக்களவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் அதிமுக தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. இதனால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டன.

அதன் பிறகு மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இணைந்து மக்கள்நலக் கூட்டணியை உருவாக்கின. 2016 பேரவைத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணி, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேமுதிக, தமாகாவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், அந்த அணி வெற்றி பெறவில்லை.

தற்போது பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2006 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதாவது, 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இணைந்துள்ளது. இது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘மார்க்சிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டம் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து அதில் முடிவெடுக்கப்படும்’’ என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்தால் 2004-க்குப் பிறகு திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x