Published : 07 Nov 2017 08:21 AM
Last Updated : 07 Nov 2017 08:21 AM

வெள்ளத்தைத் தடுக்க நடவடிக்கை இல்லை: அடையாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் - நவ.13-க்குள் அறிக்கை தர காஞ்சி ஆட்சியருக்கு உத்தரவு

வெள்ளத்தைத் தடுக்கும் வகையில் அடையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வரும் நவம்பர் 13-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் தாலுகா பகுதிக்கு உட்பட்ட வரதராஜபுரம் கிராம குடி யிருப்பு வாசியான பழனியப்பன் என்பவர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், ‘‘அடையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் முழுமையாக அகற்றவில்லை. அவ்வப்போது கண் துடைப்பு நடவடிக்கையாக ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் வெள்ள நீர் புகுந்து வரதராஜபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் சொல்ல முடியாத துயரங்களை குடியிருப்புவாசிகள் அனுபவித்து வருகிறோம். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த கடிதத்தை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், ‘அடையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தாலும், அதன்பிறகு வெள்ளத்தைத் தடுக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. இதுபோன்ற நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் எவ்வாறு அனுமதிக்கிறீர்கள் என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வழக்கறிஞர் டி.என். ராஜகோபாலன், ‘‘அடையாற்றில் மொத்தம் 182 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மொத்தம் 17 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 8 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. இன்னும் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது. பருவ மழையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்த்து பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கில் மாநில பேரிடர் மேலாண்மை குழுத் தலைவர், தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர்கள், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர்.

மேலும், அடையாற்றில் உள்ள எண்ணிலடங்கா ஆக்கிரமிப்பு்களை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வரும் நவம்பர் 13-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x