Published : 06 Nov 2017 08:53 AM
Last Updated : 06 Nov 2017 08:53 AM

‘தினத்தந்தி’ பவள விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இதையொட்டி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

‘தினந்தந்தி’ நாளிதழின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பவள விழா மலரை வெளியிட்டு, தமிழறிஞர்களுக்கு விருதுகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.

அதைத் தொடர்ந்து பகல் 11.45 மணியளவில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவரின் இல்லத் திருமண விழாவிலும் மோடி பங்கேற்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பிரதமரின் வருகையையொட்டி விமான நிலையம் முதல் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் காவல் துறையினர் நேற்று காலை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனால், கடற்கரை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. விழா நடைபெறும் அரங்கை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடி மேற்பார்வையில் கூடுதல் காவல் ஆணையர்கள் எம்.சி.சாரங்கன், எச்.எம்.ஜெயராம் தலைமையில் 10 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கே.பெரியய்யா, இணை ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, நஞ்மல்கோடா தலைமையில் போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அழைப்பிதழுடன் வருபவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்ய வேண்டும் என்றும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை வரும் பிரதமரை முதல்வர் கே.பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது. மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் நிவாரண உதவிகள் கோரியும் பிரதமரிடம் முதல்வர் மனு அளிக்க இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக சார்பில் வரவேற்பு

காலை 9.30 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்க தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த வரவேற்பில் பங்கேற்க உள்ளனர். அப்போது பாஜக தொண்டர்கள் மத்தியில் மோடி பேசுகிறார். இது தொடர்பாக ‘தி இந்து’விடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘எவ்வளவு மழை பெய்தாலும் தொண்டர்களுடன் பேசிய பிறகே மற்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வேன் என மோடி தெரிவித்துள்ளார்’’ என்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்பி மைத்ரேயன் உள்ளிட்டோரும் விமான நிலையத்தில் மோடியிடம் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x