Published : 16 Jul 2023 10:36 AM
Last Updated : 16 Jul 2023 10:36 AM

மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை - ஜூலை 20 முதல் டோக்கன், விண்ணப்பம் வீடு வீடாக விநியோகம்

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்காக வரும் 20-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன், விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் பொது விநியோகத் திட்ட இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, மாதந் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு`கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' மூலம் ரூ.1,000 வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடிக்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்கி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு கூட்டுறவுத் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த திட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன், ஒருங்கிணைப்புத் துறையாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படும். தலைமைச் செயலர் தலைமையில் இந்த திட்டத்தை மாநில அளவில் கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள், இந்த திட்ட செயல்பாடுகளைத் திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல் பணிகளை மேற்கொள்வர். சென்னை மாநகராட்சிப் பகுதியில், மாநகராட்சி ஆணையர் இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் அலுவலராக இருப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட மற்றும் வட்ட அளவிலான குழுக்களை மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் அரசால் அச்சடிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மண்டல இணைப் பதிவாளர்கள், மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து, டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களைப் பெற்று, அவை ரேஷன் கடைப் பணியாளர்களிடம் உரிய காலத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த விண்ணப்பங்களில் ரேஷன் அட்டை எண் மற்றும் பயனாளிகள் முகாம்களுக்கு வருகைபுரிய வேண்டிய தேதி மற்றும்நேரம் ஆகியவற்றை குறித்து, நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப் படி ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும். விண்ணப்பப் பதிவு முகாம் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை5.30 மணி வரையும் நடத்தப்படும். ஒரு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தை, வேறு குடும்பத்தினர் பயன்படுத்தக் கூடாது.

பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் பொருட்களை வாங்காத அட்டை தாரர்களுக்கு, விண்னப்பங்களை வழங்கத் தேவையில்லை. அவர்கள் விருப்பப்பட்டால், நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும், ரேஷன் கடைகளுக்குத் தொடர்பு இல்லாத நபர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

முகாம் நடக்கும் இடம் குறித்து ரேஷன் கடைகளில் தமிழில் தகவல்பலகை அமைக்க வேண்டும். வரும் 20-ம் தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் மற்றும் விண்ணப்பப் படிவங்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x