Published : 16 Jul 2023 10:57 AM
Last Updated : 16 Jul 2023 10:57 AM

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் முன்னாள் இயக்குநர் மீது வழக்குப் பதிவு - லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

சென்னை: முறைகேடாக ஒப்பந்தம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் முன்னாள் இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் (செயலாக்கம்) இயக்குநராகப் பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் எஸ்.ரவிச் சந்திரன். இவர், 2016 மற்றும் 2017-ம் ஆண்டு திட்ட செயலாக்க தலைமைப் பொறியாளராக பதவி வகித்த போது, விதிமுறைகளை மீறி 2 தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய விசாரணையில், கடப்பேரி - சி.எம்.ஆர்.எல், தரமணி - ஆர்.ஏ.புரம் ஆகிய இடங்களில் மத்திய கேபிள் கழகம் சார்பில் 230 கிலோ வாட் மின்சார கேபிள்கள் பதிக்கப்பட்டன. இந்த கேபிள்கள் 5 ஆண்டுக்குள் சேதம் அடைந்தாலோ அல்லது பழுது அடைந்தாலோ இந்த நிறுவனம் தான் இலவசமாக அதை சரி செய்ய வேண்டும்.

ரூ.1.30 கோடி இழப்பு: ஆனால் பழுதடைந்த இந்த கேபிள்களை சீரமைப்பதற்காக சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த 2 தனியார் நிறுவனங்களுக்கு விதிகளை மீறி தலைமை பொறியாளர் பொறுப்பில் இருந்த ரவிச் சந்திரன் ஒப்பந்தம் வழங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதேபோல 3 இடங்களில் விதிகளை மீறி அந்நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி இருப்பதும், இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.1.30 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து எஸ்.ரவிச் சந்திரன் மீது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் குமார் வழக்கு பதிவு செய்து, அவர் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த வழக்குப் பதிவின் நகலை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் எஸ்.ரவிச் சந்திரன் கைது செய்யப்படும் போது, இந்த ஒப்பந்த முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது தெரியவரும் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x