

மேட்டுப்பாளையம்: நடப்பு நிதியாண்டில் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் பயணிகளுக்கான புதிய முன்பதிவு மற்றும் பயணச்சீட்டு வழங்கும் மையத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
முன்னதாக, மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயக்கப்பட்டு வரும் விடுமுறை கால சிறப்பு மலை ரயிலில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட பின்னர், அதன் பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் தமிழக ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பயணிகளின் வசதிக்காக பல்வேறு இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஒன்பது இடங்களில் புதிய ரயில் வழி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.1,800 கோடி செலவில் சென்னை, ராமேசுவரம், மதுரை, கன்னியாகுமாி உள்ளிட்ட ஐந்து ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் 90 ரயில் நிலைய மேம்பட்டு பணிகளுக்காக அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பழமைவாய்ந்த மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், குன்னூர் மற்றும் உதகை ரயில் நிலையங்களுக்கு மட்டும் தலா ரூ.10 கோடி வீதம் ரூ.30 கோடி தொகை ஒதுக்கப்பட்டு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் - கோவை இடையே தற்போது 8 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்து 12 பெட்டிகளுடன் ரயிலை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில் மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.