

சென்னை: டெல்லி மாநகரில் மழைநீர் தேங்கியது போன்று சென்னையில் ஏற்படாது என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக் கழிவு மேலாண்மை துறை மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், திருவெற்றியூர், மணலி, மாதவரம் மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் ஒரு பகுதி ஆகியவற்றில் தூய்மைப் பணிகளை சென்னை என்விரோ நிறுவனம் மேற்கொள்கிறது. இது மாபெரும் குப்பை வகை பிரிக்கும் போட்டிகளை நடத்தியது.
இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று முதல் 3 பேருக்கு டி.வி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் ஆகியவற்றை சிறப்புப் பரிசாக வழங்கினர். மேலும் 20 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டது.
பின்னர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான இடங்களில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழை காரணமாக டெல்லியில் மழைநீர் தேங்கியது போன்று சென்னையில் ஏற்படாது என்றார்.
இந்நிகழ்ச்சியில், நிலைக் குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) ஜி.சாந்த குமாரி, கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர் லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையர் எம்.சிவ குரு பிரபாகரன், தலைமை பொறியாளர் (திடக் கழிவு மேலாண்மை) என்.மகேசன், சென்னை என்விரோ திட்டத் தலைவர் பரிசுத்தம் வேதமுத்து பங்கேற்றனர்.