Published : 16 Jul 2023 04:05 AM
Last Updated : 16 Jul 2023 04:05 AM

தடுப்பு காவல் சட்டத்தை அனைவரும் அறிய வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணைய வளாகத்தில், சர்வதேச இளைஞர்கள் திறன் நாள் மற்றும் பன்னாட்டு நீதி நாள் நேற்று கடைப் பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, மனித உரிமை ஆணையம், வி.ஐ.டி பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற நீதிபதி எம். சுந்தர் பேசியதாவது: சட்டம் பயிலும் மாணவர்களுக்கு, மனித உரிமைகள் பகுதி முக்கியமானது. உயிர், சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் ஆகிய மனித உரிமை பொருண்மைகளில் சுதந்திரமே முக்கியமானது.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தடுப்புக் காவல் சட்டத்தில், காரணம் தெரிவிக்காமல் ஓராண்டு சிறையில் அடைக்கும் நடைமுறை இருந்தது. பிரிட்டனில் 1945-ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒரு நீதிபதி,தடுப்புக் காவலில் கைது செய்து, சிறையில் அடைப்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்பது அடிப்படை மனித உரிமை என்று தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, இந்தியாவிலும் ஒரு வழக்கில், தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்வதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவோரை, தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது. அதே நேரத்தில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போரை தடுப்புக் காவலில் கைது செய்யலாம்.

இரண்டுக்கும் சிறு வித்தியாசமே உள்ளது. இரு நபர்களோ, கூட்டமோ மோதிக்கொண்டால், அது சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என்றும், இரு சமூகங்கள் மோதுவது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது என்றும், நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுமானால் அது தேசப் பாதுகாப்பு பிரச்சினை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படும் நபருக்கு, அவருக்குத் தெரிந்த மொழியில் கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. அரை நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தீர்ப்பு, தற்போது வரை சட்டமாகத் தொடர்கிறது. இந்த சட்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன் பேசும் போது, "குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து காவல் துறையினர் அதிகம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சிறந்த சமூகம் உருவாக வேண்டுமானால், மனித உரிமைகள் காக்கப்படுவதுடன், அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.

டி.ஜி.பி சங்கர் ஜிவால் பேசும்போது, "மாணவர்கள் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பைப் பெறுவதை இலக்காக வைத்துக் கொள்ளாமல், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்வர வேண்டும்" என்றார். நிகழ்வில், மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், ஆணைய ஐ.ஜி. மகேந்திர குமார், பதிவாளர் என்.முரளிதரன், சென்னை விஐடி இணைப் பேராசிரியர் என்.கோபி நாதன் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x