

சென்னை: முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காமராஜருக்கு மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “காமராஜரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ் நாளை அர்ப் பணித்த பெருமகன்.
சமூக அதிகாரம் அளித்தலுக்கு அவர்அளித்த முக்கியத்துவம், நம் அனைவருக்கும் வழிகாட்டும். வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் மீதானஅவரது தொலை நோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் அர்ப்பணிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, சென்னை நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, காமராஜர் படத்துக்கு மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், காமராஜர் படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார். அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்துக்குச் சென்று, அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அரும்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், செயலர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காமராஜர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
தேமுதிக சார்பில் கட்சி தலைமைஅலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைச் செயலாளர் ப.பார்த்தசாரதி, காமராஜர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திக தலைவர் கி.வீரமணி, அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அமைப்பின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.