Published : 16 Jul 2023 04:10 AM
Last Updated : 16 Jul 2023 04:10 AM

சென்னை மின்சார ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகளை நடுப்பகுதிக்கு மாற்றியமைக்க திட்டம்

சென்னை: மின்சார ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகள் நடுப்பகுதிக்கு மாற்றியமைக்க ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) திட்டமிட்டுள்ளது. இதற்கான, பணிகளை மேற்கொள்ள ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்டம் சார்பில், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித் தடங்களில் தினமும் 630-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இவற்றில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் கூட்ட நெரிசல் இன்றி ஓரளவுக்கு நிம்மதியாக பயணம் மேற்கொள்ளும் வகையில், ஒவ்வோர் மின்சார ரயிலிலும் பெண்களுக்காக தலா இரண்டு பெட்டிகள் இருக்கின்றன. இதில், பாதி இடம் முதல் வகுப்பு பயணிகள் டிக்கெட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மின்சார ரயில்களில் பெண் பயணிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அண்மையில், கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் இந்திரா நகர் நிலையம் அருகே மின்சார ரயிலில் பயணித்த பெண் பயணியிடம் இருவர் செல்போன் பறித்தபோது, அப்பெண் கிழே விழுந்து படுகாயம் அடைந்து, உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மின்சார ரயில்களில் பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்பாடு குறித்து சமீபத்தில், ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், ரயில்வே கோட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த ஆணையரக அதிகாரி, தாம்பரம், ஆவடி, வேளச்சேரி ரயில்வே பணிமனை மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை: புறநகர் மின்சார ரயில்களில் பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மற்றொரு புறம் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவில் போதிய ஆட்கள் உடனடியாக நியமிக்க முடியாத சூழல் இருக்கிறது.

இருப்பினும், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். மின்சார மற்றும் குறுகிய துாரத்துக்கு இயக்கப்படும் மெமுவகை ரயில்களில் பெண்களுக்கான பிரத்யேக பெட்டிகள் இடமாற்றம் செய்ய ஆலோசிக்கப்பட்டது. மேலும், கொள்கை ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதாவது, பெண்களுக்கான பெட்டிகள் ரயில்களின் நடுப்பகுதியில் ஒரேபெட்டியாகவோ அல்லது இரண்டு பெட்டிகளில் பாதி அளவாக ஒதுக்கீடு செய்தால் ரயில்வே பாதுகாப்பு பணிக்கு வசதியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார்போல், ரயில்களின் பெட்டிகளிலும், ரயில் நிலையங்களிலும் உரிய மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x