Published : 22 Nov 2017 07:47 AM
Last Updated : 22 Nov 2017 07:47 AM

சசிகலா, தினகரன் குடும்பத்தினரின் பினாமி சொத்துகள் குறித்துவருமான வரித்துறை விசாரணை

சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரின் பினாமி சொத்துகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சசிகலா, தினகரன், திவாகரன் குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 187 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நிறுவனங்கள் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து அதுகுறித்து இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக் கிழமை இரவில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பிறகு நேற்று வரை யாரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

போயஸ் கார்டனில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் 187 இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. ஆவணங்களில் இருக்கும் சொத்து மதிப்பும், நிஜத்தில் இருக்கும் சொத்து மதிப்பும் உண்மையா என்பதை கண்டறிய வேண்டியுள்ளது. இது முடிந்த பின் அடுத்தகட்ட விசாரணை தொடங்கும்.

சசிகலா, தினகரன் குடும்பத்தினரின் பினாமி சொத்துகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். முன்பெல்லாம் வீட்டு வேலைக்காரர்கள்தான் பினாமிகளாக இருப்பார்கள். இப்போது பணக்காரர்களே பினாமிகளாகவும் இருக்கின்றனர். அவர்களை கண்டுபிடிப்பதில் சிறிய காலதாமதம் ஏற்படுகிறது.

பினாமி சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு தனி ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக வருமான வரித்துறை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். திருத்தம் செய்யப்பட்ட பினாமி சொத்துகள் சட்டம், 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. அதைத் தொடர்ந்தே பினாமி சொத்துகள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு சொத்து பினாமி சொத்து என விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் அதன் உண்மையான உரிமையாளருக்கு 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். சம்பந்தப்பட்ட சொத்து பறிமுதல் செய்யப்படுவதுடன் அதன் சந்தை மதிப்பில் 25 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும். பினாமிகளாக செயல்பட்டவர்களுக்கும் தண்டனை உண்டு.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x