

அரியலூர்: அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் நேற்று செய்தியாளர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியது:
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் மட்டுமில்லாமல், மேற்கு மாவட்டம், டெல்டா மாவட்டம், திருச்சி போன்ற பகுதிகளிலும் அமைக்க வேண்டும். இவை, போட்டித் தேர்வுகள், ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும். எனவே, உலகத்தரம் வாய்ந்த நூலகங்களை மண்டலம் வாரியாக அமைக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்தவர்கள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில விதிமுறைகளை முதல்வர் வரையறை செய்திருக்கலாம். பொதுமக்களின் உணர்வுகளை மதித்து, அதற்கு ஏற்ப அந்த வரையறைகளில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் முதல்வர் கொண்டு வர வேண்டும் என்றார்.