Published : 27 Nov 2017 10:27 AM
Last Updated : 27 Nov 2017 10:27 AM

பழவேற்காடு கோயிலில் பல கோடி மதிப்புள்ள 10 டன் செம்மரக் கட்டைகளை விற்று மோசடி: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றச்சாட்டு

பழவேற்காட்டில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஆதி நாராயணசாமி கோயிலில் இருந்த 10 டன் செம்மரக் கட்டைகளை விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்து உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஆதி நாராயணசாமி கோயில் உள்ளது. இங்கு கடந்த சில வருடங்களாக பூஜைகள் நடக்கவில்லை. இதனால் கோயில் பாழடைந்து கிடக்கிறது. மேலும், இங்கு உள்ள சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்பட்டு கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து இக்கோவிலை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இக்கோவிலை 2012-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. அதுவரை கோயிலில் தினமும் பூஜை நடத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்றபிறகு கோயில் பராமரிக்கப்படவில்லை. கடந்த 2 வருடங்களாக இந்த கோயில் பூட்டிக் கிடக்கிறது. பூஜைகள் நடைபெற வில்லை.

இக்கோயிலில் தாயார் சன்னிதி இடிக்கப்பட்டுள்ளது. கோயில் உத்திரங்களில் இருந்த செம்மரக் கட்டைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. கோயிலில் விக்கிரகங்களும், சிலைகளும் மாயமாகி உள்ளன. சுமார் 10 டன் எடை கொண்ட செம்மரக் கட்டைகள், சிலைகள், பொருட்களை அதிகாரிகள் திருட்டுத்தனமாக விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.

இந்தக் கோயிலில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. கோயில் பூட்டியுள்ள நிலையில் ஏன் அதற்கு நிர்வாகியை நியமித்து சம்பளம் கொடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை இக்கோயிலை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்து சமய ஆன்றோர், சான்றோர் அடங்கிய வாரியத்தை அமைத்து இந்து கோயில்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு ராஜா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x