Published : 15 Jul 2023 05:04 AM
Last Updated : 15 Jul 2023 05:04 AM
சென்னை: சென்னை கோயம்பேடு ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (81), காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோருக்கு இ-மெயில் மூலம் அனுப்பிய புகாரில், ``எனக்கு மனைவி வசந்தி மற்றும் 4 மகன்கள் உள்ளனர். கோயம்பேடு சந்தையில் எனது பழக்கடையை, 4-வது மகன் சதீஷ் நடத்தி வந்தார்.
இந்நிலையில், அடிக்கடி பணம் கேட்டு, மகன் சதீஷ் எங்களை கடுமையாக நடத்தினார். இதனால், மனைவிக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், சதீஷ் எங்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்று, 2017-ல் தனியார் வீட்டுக் கடன் நிறுவனத்தில் பழக்கடை பத்திரத்தை அடமானம் வைத்து, ரூ.25 லட்சம் கடன் பெற்றார்.
இதற்கான வட்டியை சரியாகக் கட்டாததால், கடையை ஏலம்விடும்நிலை ஏற்பட்டது. இதனால், வேதனையடைந்த நான், கடைசிகாலத்துக்காக சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு, கடன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை ரூ.24 லட்சத்து 14,627-ஐ செலுத்தினேன்.
இதையடுத்து அந்த நிறுவனத்தினர், குடும்பத்தினர் அனைவரும் கையொப்பமிட்டு, கடை பத்திரத்தை மீட்டுச் செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால், ரூ.10 லட்சம் கொடுத்தால்தான் கையெழுத்திடுவதாக சதீஷ் மிரட்டி வருகிறார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கஉதவ வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, முதியவர் வீடு தேடிச் சென்று, பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
இதன்படி, அண்ணா நகர் துணை ஆணையர் குமார் முதியவரின் வீட்டுக்கு சென்று பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, பழக்கடை பத்திரத்தை மீட்டுக் கொடுத்தார்.
துரித நடவடிக்கை மேற்கொண்டு, மூத்த குடிமகனின் குறையை தீர்த்து வைத்த காவல் ஆணையரின் செயல் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT