

சென்னை: மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டம் குறித்த விரிவான அறிக்கையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
சென்னையில் தற்போது இரு வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, கோவை,மதுரையில் மெட்ரோ ரயில்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, சிறப்பு முயற்சிகள் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனாவிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் சித்திக், திட்ட இயக்குனர் அர்ச்சுனன் மற்றும் அதிகாரிகள் நேற்று வழங்கினர்.
மதுரையில் திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 27 கி.மீ. மேம்பாலப் பாதையில், 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப் பாதையில் 3 ரயில் நிலையங்களும் அமைகின்றன.
கோவையில் 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவுவரையிலும் மெட்ரோ ரயில்உயர்நிலைப் பாதை அமைக்கப்படுகிறது. மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.