

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் உற்பத்தி பணிகளை விரைந்து தொடங்க அலுவலர்களுக்கு அமைச்சர் காந்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சென்னை குறளகம் கைத்தறி ஆணையரக அலுவலகத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
சட்டப்பேரவை அறிவிப்புகளில் செயலாக்கத்தில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். பொங்கல் பண்டிகையையொட்டி, சேலை மற்றும் வேட்டி வழங்கும் திட்டத்தின்கீழ் உற்பத்தி தொடர்பான பணிகளை சங்கங்களில் உடனே தொடங்க வேண்டும். குறித்த காலத்துக்குள் திட்டத்தை விரைந்து நிறைவேற்றி தரமான வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்ய வேண்டும்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.400 கோடி விற்பனை இலக்கை எட்டும் வகையில் மின்வணிகம் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி மேம்பாடு போன்ற புதிய வணிக உத்திகளை வகுத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கைத்தறி துறைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துறையின் ஆணையர் கே.விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.