

மதுரை: மதுரை எம்.பி. மீது அவதூறு பரப்பிய வழக்கில் கைதான பாஜக செயலாளரின் ஜாமீன் நிபந்தனையில் மாற்றம் செய்து, உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மீது ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், ஒரு மாதம் மதுரையில் தங்கியிருந்து, சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி, சூர்யா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
இந்நிலையில், சிதம்பரம் கோயில் விவகாரத்தில் சூர்யாவை கடலூர் போலீஸார் தேடி வந்ததால், அவர் தலைமறைவானார். ஜாமீன்நிபந்தனையை நிறைவேற்றாததால், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். அதற்கு சூர்யாபதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.
சென்னையில் குடும்பத்தினர்...
இதற்கிடையே, ஜாமீன் நிபந்தனையில் மாற்றம் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் சூர்யா மனு தாக்கல் செய்தார். அதில், “எனது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். வாய் பேச முடியாத தாயார், 100 வயதான தாத்தா ஆகியோரை நான்தான் கவனிக்க வேண்டும்.
எனவே, எனது மனுவைத் தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, சென்னை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திடும் வகையில் நிபந்தனையில் தளர்வு அளிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். அரசுத் தரப்பில் ஜாமீன் நிபந்தனையை மாற்றம் செய்ய ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, மனுதாரர் சென்னை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையில் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.