தருமபுரி வருகையை தவிர்க்குமாறு அன்புமணிக்கு போலீஸார் எச்சரிக்கை?

தருமபுரி வருகையை தவிர்க்குமாறு அன்புமணிக்கு போலீஸார் எச்சரிக்கை?
Updated on
1 min read

தருமபுரியில் போலீஸார் எச்சரிக்கை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் நாயக் கன்கொட்டாயை அடுத்த நத்தம் கிராமத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதான 6 பேரும் ஆயுதங்களை கையாள பயிற்சிப் பெற்றவர்கள் என்றும், சிலரை இலக்கு வைத்து அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் போலீஸார் வட்டாரத்தில் கூறப்பட்டது. கைதானவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இதில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு அலுவலகத்தை திறக்க உள்ளதாக அறிவிக் கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போலீஸார் அனுமதிக்கும்வரை சில நாட்களுக்கு தருமபுரிக்குள் வர வேண்டாம் என்று அன்புமணி ராமதாஸுக்கு தகவல் கூறப்பட் டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் முயற்சியால், தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எம்.பி. அலுவலகம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களை சந்திக்கும் மையம் அமைக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அந்த புதிய அலுவலகம் திறக்கப்படும் முன்பாகவே தேர்தல் நடைபெற்று அன்புமணி வெற்றிபெற்றார்.

நாடாளுமன்ற உறுப்பின ருக்கான தலைமை அலுவலகமாக இந்த அலுவலகத்தை செயல்படுத்த பாமக-வினர் திட்டமிட்டு வந்தனர். மேலும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் போலீஸார் எச்சரிக்கை விடுத்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பா.ம.க.வினர் தெரிவித்தனர்.

‘கைது தொடர்ந்தால் வெளியேறுவோம்’

தருமபுரி அடுத்துள்ள நத்தம் கிராமத்தில், ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாகக் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 பேரை போலீஸார் கைது செய்தனர். திங்கள்கிழமை காலை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நத்தம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து இது பற்றி முறையிட்டனர்.

“கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்ளிட்டவர்களை ஆயுதங்கள் பதுக்கியதாக பொய்ப்புகார் கூறி காவல் துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும், கிராமத்துக்குள் திடீரென நுழையும் போலீஸார் முரட்டுத் தனமாக நடந்து கொள்கின்றனர்.

அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் உள்நோக்கத்துடன் போலீஸார் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். கைது நடவடிக்கை தொடர்ந்தால் குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை திரும்பக் கொடுத்துவிட்டு ஊரைவிட்டு வெளியேறுவோம்,” என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் விவேகானந்தன் கூறினார். மேலும் நத்தம் மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் முறையிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in