

சென்னை: "போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை பெற நகைகளை விற்றும் நிலங்களை விற்றும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் செந்தில் பாலாஜி வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 11 மற்றும் 12ம் தேதிகளில், மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமலாக்கத் துறை வாதத்துக்கு பதில் வாதத்துக்காக வழக்கை நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார். வெள்ளிக்கிழமை விசாரிக்க ஆரம்பித்த நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டார். மதிய உணவு இடைவெளிக்குச் செல்லாமல், சுமார் 3 மணி நேரம் இந்த வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
> மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்ற காலத்தை முதல் 15 நாள் நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா? என்பதை பொருத்தவரை, சட்டப்படி முதல் 15 நாட்களில் காவலில் எடுக்க வேண்டும்.
> செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவல் வைத்த பின்னர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் . நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்தபின் அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை
செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருப்பதால், எப்போதிலிருந்து நீதிமன்ற காவல் நாட்களாக கருத வேண்டும் எனபதை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.