Published : 14 Jul 2023 05:50 PM
Last Updated : 14 Jul 2023 05:50 PM

ஓவியங்கள் மீது ஆளுங்கட்சியினர் சுவரொட்டி: மாணவியரின் உழைப்பை வீணடிக்கலாமா?

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான சுற்றுச்சுவரில் தத்ரூபமாக வரையப்பட்டிருந்த ஓவியங்களின் மீது ஒட்டப்பட்ட சுவரொட்டிகள். | படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான சுற்றுச் சுவரில் தத்ரூபமாக வரையப்பட்டிருந்த ஓவியங்கள் மீது ஆளுங்கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாளையங்கோட்டை வாசகர்சுரேஷ், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் பகுதியில் கூறியதாவது: திருநெல்வேலிமற்றும் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பழைய, பாரம்பரிய மிக்க கட்டிடங்களை அரசாங்கம் புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பெருமுயற்சி எடுத்து இப்பணிகளை மேற்கொள்கின்றன.

ஆனால், சீரமைக்கப்பட்ட பாரம்பரியமிக்க கோட்டைச் சுவர்களிலும், அரசுக்கு சொந்தமான சுவர்களிலும் சுவரொட்டிகளை ஒட்டும் தவறான போக்கு நீடிக்கிறது. இதை யாரும் கண்டிப்பதில்லை. இவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் தடைவிதிக்க வேண்டும்.

மீறி ஒட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் போக்குவரத்து காவல்துறையினர், சாலையோரங்களில் அரசியல் கட்சியினர் கொடிக்கம்பங்கள், பேனர்கள் வைப்பதை கண்டுகொள்வதில்லை. இவை ஆபத்தை விளைவிக்க கூடியவை என்பது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்.

அமைச்சர்கள், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வரும்போதெல்லாம் பாளையங்கோட்டையில் வீரபாண்டியன் கட்டபொம்மன் சிலை அமைந்துள்ள கோட்டை சுவர், மேடை காவல்நிலைய கோட்டை சுவரில் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். திமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆ. ராசா எம்.பி. திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் வந்திருந்தபோது வ.உ.சி. மைதான சுற்றுச்சுவரில் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். இதே சுற்றுச்சுவரில் உலக பறவைகள் தினத்தையொட்டி கடந்த பிப்ரவரி 12-ம் தேதிதான் பறவைகளின் ஓவியங்களை மாணவ, மாணவயர் தத்ரூபமாக வரைந்திருந்தனர்.

சுவரொட்டிகள் அகற்றப்பட்ட பின் சிதைவடைந்த ஓவியங்கள்.

அந்த குழந்தைகளின் முயற்சியை முற்றிலும் வீணடிக்கும் வகையில் அந்த ஓவியங்கள் மீது சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரியமிக்க இடங்கள், அரசு சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதை கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பகுதி செயலாளர்களிடம் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இதுபற்றி தன்னார்வலர்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, வ.உ.சி. மைதான சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஆனாலும், அதில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் சிதைந்து பொலிவிழந்தன. இந்த பிரச்சினைக்கு மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களும், காவல்துறையும் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்குமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x