

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில், புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று திறந்து வைத்தார். இந்த நிறுத்தத்தில் 1,500 இருசக்கர வாகனங்கள், 180 கார்களை நிறுத்த முடியும்.
பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம், கூடுதல் நகரும் படிக்கட்டுகள், உடைமைகளை பரிசோதிக்கும் இயந்திரம் நிறுவுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள 4 சக்கர வாகன நிறுத்துமிடம், கடந்த மார்ச் 24-ம் தேதிமுதல் 3 மாதங்களுக்கு சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் வாகனம் நிறுத்துமிடம் திறக்கப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்துமிடத்தில் 1,500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 180 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். பயணிகள் இந்த வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இங்கு, கூடுதலாக இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டு வெகு விரைவில் திறக்கப்படவுள்ளது. மேலும், தேவைப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சுனன், கூடுதல் பொது மேலாளர் சதீஷ்பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.