ஆண்டிபட்டி பேரூராட்சியில் - 7 மாதங்களில் 9 பொறுப்பு செயல் அலுவலர்கள் மாற்றம் : அடிப்படை பணிகளில் பெரும் பாதிப்பு

ஆண்டிபட்டி பேரூராட்சியில் - 7 மாதங்களில் 9 பொறுப்பு செயல் அலுவலர்கள் மாற்றம் : அடிப்படை பணிகளில் பெரும் பாதிப்பு
Updated on
2 min read

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சியில், கடந்த 7 மாதங்களாக தனி செயல் அலுவலர் நியமனம் இல்லை. பொறுப்பு செயல் அலுவலர்கள் 9 பேரே அடுத்தடுத்து தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர். இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டு, வளர்ச்சிப் பணிகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் செயல் அலுவலராகப் பணி புரிந்த சின்னச்சாமி பாண்டியன், 7 மாதங்களுக்கு முன் உத்தமபாளையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, செயல் அலுவலர் நியமனம் இல்லாததால், மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள கெங்குவார்பட்டி, வீரபாண்டி, மேகமலை, தேவதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சி செயல் அலுவலர்களே இங்கு பொறுப்பு செயல் அலுவலர்களாக செயல்படத் தொடங்கினர்.

இதன்படி, கடந்த 7 மாதங்களில் ராதா கிருஷ்ணன், வி.சந்திர கலா, ஆ.விஜயா, கணேசன், சண்முகம் ஆகியோர் அடுத்தடுத்து இரண்டு முறை பொறுப்பு அலுவலர்களாகச் செயல்பட்டனர். தற்போது, கெங்குவார்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் பொறுப்பு செயல் அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

இதனால் துப்புரவு, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய திட்டப் பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் முடிவு எடுக்க முடியாமல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வரி வசூல், நிர்வாகம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டு, பேரூராட்சியில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கடும் இழுபறி நீடிக்கிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆண்டிபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் பொறுப்பு செயல் அலுவலர் வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே இங்கு வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட தேதியில் கட்டிட திட்ட அனுமதி, குடிநீர் இணைப்பு பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது என்றனர்.

முனீஸ்வரன்
முனீஸ்வரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் முனீஸ்வரன் கூறியது: 10-வது வார்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவில் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டும் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. கழிப்பிடம் சீரமைக்காத நிலை உள்ளது. இதேபோன்ற பிரச்சினைகள் அனைத்து வார்டுகளிலும் உள்ளன. ஆட்சியரிடம் இதுகுறித்து 2 முறை மனு கொடுத்துள்ளோம்.

பேரூராட்சி இயக்குநரிடமும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். பேரூராட்சியில் பணிகள் சீராக நடைபெற நிரந்தரமாக ஒரு செயல் அலுவலரை நியமிக்க வேண்டும். இதற்காக வரும் 20-ம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in