

புதுச்சேரி: ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் புதுவை யில் பேருந்து நிலையம் சீரமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரூ.30 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதுவை புதிய பேருந்து நிலையம் நவீன மயமாக்கப்பட உள்ளது. தற்போது முதல்கட்டமாக பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக பேருந்து நிலையத்தில் 5 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு தடுப்பு அமைக்கும் பணியில் ஒப்பந்த தாரர் ஈடுபட்டுள்ளார்.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலையத்தின் உட்புறம் உள்ள கடை வியாபாரிகள், நேற்று கடைகளை அடைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையத்துக்குள் செல்ல முடியாமல் பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் மறைமலை அடிகள் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் தொடர்பாக கடைக் காரர்கள் கூறுகையில், "பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்பட பிறகு எங்களுக்கு மீண்டும் கடை கள் தருவதை உறுதி செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் முடியும்வரை மாற்று இடம் தர வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.
தகவலறிந்த போலீஸார் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட் டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதிகாரிகளை சந்தித்து பேசிதீர்வு காண வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் போலீஸார் அறிவுறுத்தி னர். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.