

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் தொடர்பாக மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். காமராஜர் பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் இளையபெருமாளின் நூற்றாண்டு விழா காங்கிரஸ் எஸ்சி அணி சார்பில் சென்னையில் 19-ம் தேதியும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அவர் சொந்த ஊரான காட்டுமன்னார் கோவிலில் 28-ம் தேதி நடைபெறும்.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், காமராஜர் பிறந்த நாளான நாளை திறக்கப்பட உள்ளது. இவ்விரு நிகழ்வுகளை மேற்கொள்ளும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காமராஜர் தனது வாழ்நாள் முழுவதும் மது விற்பனையை எதிர்த்தவர். வளரும் தமிழகத்தை அது சீரழிக்கும் என கருதினார். அதனால் அவரது பிறந்த நாளில் (ஜூலை 15) மதுக்கடைகளை மூட வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாளில் இரவு பாடசாலைகளை தொடங்கும் முயற்சியை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.