Published : 14 Jul 2023 04:29 AM
Last Updated : 14 Jul 2023 04:29 AM

‘முதல்வரின் முகவரி’ துறையில் 6 மாதங்களில் 3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு - தமிழக அரசு தகவல்

சென்னை: ‘முதல்வரின் முகவரி’ துறையில் கடந்த 6 மாதத்தில் பெறப்பட்ட 3.42 லட்சம் மனுக்களில் 2.94 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

‘முதல்வரின் முகவரி’ துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ‘முதல்வரின் முகவரி’ துறையில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், முதல்வர் தனது சுற்றுப்பயணத்தின்போது பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை பெறப்பட்ட 3.42 லட்சம் மனுக்களில் 2.94 லட்சம் மனுக்கள் அதாவது 86 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வின் தன்மை குறித்து ஏ, பி மற்றும் சி என தரவரிசைப்படுத்தப்பட்டதன் மதிப்பீடுகளையும் முதல்வர் ஆய்வு செய்தார்.

முதல்வரின் உதவி மையத்தின் இலவச அழைப்பு எண் ‘1100’ மூலமாக தொடர்பு கொள்பவர்களின் அழைப்புகளை ஏற்பது, கோரிக்கைகளாக பதிவு செய்வது, ஏற்கெனவே பதிவு செய்த மனுவின் நிலவரம், மனுதாரர்களை தொடர்பு கொண்டு மனுக்களின் தரம் கண்காணிப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்த
சேவைகளின் மதிப்பீடு பெறுவது போன்ற பணிகளும் நடைபெறுகின்றன.

அத்துடன் ‘ஏஐ சேட்பாட்’ என்ற புதிய தொழில்நுட்பம் வாயிலாக விரைவாக பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வின்போது, மனுதாரர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்பட்டதை உறுதிசெய்யும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சில மனுதாரர்களை தொலைபேசி வாயிலாகத்
தொடர்பு கொண்டு, அவர்களின் மனுக்கள் மீதான தீர்வு குறித்து கேட்டறிந்தார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த மனுதாரரின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் ஒப்புதல் அளிக்கப்பட்டு, கடந்த ஜூன் 19-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறித்து அறிந்தார். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த மாணவி பட்டப்படிப்பு பயில கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதையும் கேட்டறிந்தார்.

இதையடுத்து, மனுக்களை விரைவாக தீர்வு செய்த தருமபுரி, பென்னாகரம் வட்டாட்சியர் எச். சவுகத் அலி மற்றும் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் டிஎஸ்பி ஜெ.ஜெயபால் ஆகியோரை பாராட்டியும், சுணக்கமாக செயல்படும் அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளையும் முதல்வர் வழங்கினார்.

ஆய்வில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறை செயலர் குமார் ஜயந்த், டிஜிபி சங்கர் ஜிவால், நில நிர்வாக ஆணையர் எஸ். நாகராஜன், ‘முதல்வரின் முகவரி’ துறை சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செய்தித் துறை இயக்குநர் த.மோகன், முதல்வர் தனிப்பிரிவு அலுவலர் ஆர்.ராம்பிரதீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x