

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 5 லட்சம் மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை.13) தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 5 லட்சம் பேரிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள பொன்னேரியில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ரவி, சமூகப் பேரவைத் தலைவர் கே.பாலு உள்பட கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஜெயங்கொண்டம் உடையார்பாளையம், வி.கைகாட்டி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்களிடமும் கையெழுத்து பெறுகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூரிலிருந்து, கரைவெட்டி பறவைகள் சரணாலயம், திருமானூர், ஏலாக்குறிச்சி, குருவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து, 30ம் தேதி அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக காட்டுமன்னார்கோயிலுக்கு நடைபயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.