பல்வேறு துறைகளை சேர்ந்த 3.30 லட்சம் புத்தகங்களுடன் மதுரையில் திறப்பு விழாவுக்கு தயாரான ‘கலைஞர் நூலகம்’

மதுரை கலைஞர் நூலகத்தின் நுழைவு வாயில் முன் வைக்கப்பட்டுள்ள புத்தக மாதிரிகள். படங்கள்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை கலைஞர் நூலகத்தின் நுழைவு வாயில் முன் வைக்கப்பட்டுள்ள புத்தக மாதிரிகள். படங்கள்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: மதுரையில் ரூ. 215 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கலைஞர் நூலகக் கட்டிடம், 3.30 லட்சம் புத்தகங்களுடன் ஜூலை 15-ல் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

மதுரை - நத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்துக்காக மொத்தம் ரூ. 215 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ. 18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகளும், கட்டுமானத்துக்காக ரூ.130 கோடியும் ஒதுக்கப்பட்டது.

இந்த பிரம்மாண்ட நூலகம் தென்மாவட்ட மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராவோர், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய, தொல்லியல் ஆர்வலர்களுக்கு அறிவுப் புதையலாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கதது.

கலைஞர் நூலகத்தில் கலை இலக்கியம், அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த நூல்கள் என சுமார் 3.30 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை அறைகள் வாரியாக ஒழுங்குபடுத்தி, வாசகர்கள் படிக்கும்வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

அதிகாரிகள் தகவல்: இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: வாசிப்பை நேசிக்கும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இந்நூலகம் அமையப் பெற்றுள்ளது. நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க மட்டும் ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டது.

இதன்மூலம் தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், கலை, அறிவியல், தொழில் நுட்பங்கள் சார்ந்த ஆங்கிலப் புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், பயிற்சி ஏடுகள், விவசாயத் தொழிலுக்கான புத்தகங்கள், பிரத்யேகமாக குழந்தைகளை கவரும் புத்தகங்கள் உள்ளிட்ட எண்ணற்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. நவீன கலை அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்நூலகம் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக மாறும் எனலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

15-ல் திறப்பு: கலைஞர் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக நூலகம் அருகிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் நடக்கின்றன. பள்ளி, கல்லூரிமாணவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். விழாவை முன்னிட்டு மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in