செந்தில் பாலாஜியை விசாரிக்கும்போது ஏதாவது விபரீதம் நேர்ந்திருந்தால் யார் பொறுப்பேற்பது?: சொலிசிட்டர் ஜெனரல் வாதம்

செந்தில் பாலாஜியை விசாரிக்கும்போது ஏதாவது விபரீதம் நேர்ந்திருந்தால் யார் பொறுப்பேற்பது?: சொலிசிட்டர் ஜெனரல் வாதம்
Updated on
2 min read

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, ஏதாவது விபரீதம் நேர்ந்திருந்தால் யார் பொறுப்பேற்பது? என ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜராகி வாதிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று 2-வது நாளாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக நடந்தது.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், “சட்டவிரோத பணப்பரிமாற்றங்களால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தின் பேரில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டம். இந்த சட்டத்தின் கீழ் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டியது அமலாக்கத் துறையின் கடமை. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது புலன் விசாரணையை பாதிக்கும்.

இந்த வழக்கில் ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணையே. அமலாக்கத் துறைக்கு புலன் விசாரணை செய்ய அதிகாரம் கிடையாது எனக் கூற முடியாது. உரிய காரணங்கள் இல்லாமல் கைது நடவடிக்கையி்ல் ஈடுபடும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. 2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் 350 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமலாக்கத் துறையின் புலன் விசாரணையால் வங்கி மோசடி வழக்குகளில் மட்டும் இதுவரை ரூ.19 ஆயிரம் கோடி மீட்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில் கைதுக்கு முன்பாக சேகரிக்கப்படும் ஆதாரங்கள் ஆரம்ப கட்ட முகாந்திரம் தான். அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் தீர்வு காண முடியாது.

எல்லா அதிகாரமும் உண்டு: இதனால் புலன்விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிப்பதும் அவசியமான ஒன்று. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அமலாக்கத் துறைக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளது.

இந்த சட்டத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க முடியும் என்பதாலும், ஜாமீனில் விட முடியாது என்பதாலும் அமலாக்க துறைக்கு காவல் துறையினருக்கான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் சுங்கவரி சட்டம் போன்ற பிற சட்டங்களின் கீழ் ஓராண்டு முதல் தண்டனை என்பதால் கைது செய்த அதிகாரிகளே ஜாமீனில் விட முடியும்.

அந்த சட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காவல்துறையினருக்கான அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்படவில்லை. அவர் மீதான கைது நடவடிக்கை சரியானதுதானா? என்பதை நிரூபிக்க அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது.

தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பதால் காவல் கோரியது, நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் அல்ல” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கார்த்திகேயன், “செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு துஷார் மேத்தா, “உடல்நலக்குறைவால் மருத்துவமனையிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென அமர்வு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அந்த நிபந்தனையை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடினோம். அதேநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவமனையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிப்பதன் மூலம் அவருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது?

எனவே அவர் மருத்துவமனையில் உள்ள நாட்களை நீதிமன்ற காவலில் உள்ள நாட்களாக கருதக் கூடாது. அதேபோல தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோதக் காவலில் இல்லை என்பதால் ஆட்கொணர்வுமனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரியதில் இருந்தே அவர் நீதிமன்றக் காவலில் இருப்பதை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

40 சதவீத இதய அடைப்பு: செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி உறுதி செய்துள்ளார். ஆனால் நீதிபதி ஜெ.நிஷாபானுவின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டால், இதுபோன்ற வழக்குகளில் இனி யாரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்ய வேண்டாம், ஆட்கொணர்வு மனு தாக்கல்செய்தாலே போதும் என்ற மனநிலைஉருவாகி விடும். பொதுவாக அனைவருடைய இதயத்திலும் 40 சதவீத அடைப்பு இருக்கும்” எனக் கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

அதையடுத்து, மேகலா தரப்பு பதில் வாதத்துக்காக இந்த வழக்கை நீதிபதி கார்த்திகேயன் நாளைக்கு (ஜூலை 14) தள்ளி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in