

சென்னை: டாஸ்மாக் கடைகளின் நேரத்தில் மாற்றம் இல்லை. 90 மிலி ‘டெட்ரா பேக்’கில் மது வழங்குவது குறித்து அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்டு அதற்கேற்ப முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டாஸ்மாக் கடைகளை வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே திறக்க கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்திருந்தேன். இது தொடர்பாக நான் கூறிய கருத்தின் முழுபகுதியையும் கேட்காமல் சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. டாஸ்மாக் கடைகளுக்கான நேரத்தை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை.
அதேநேரம் மது விற்பனையில் உள்ள சில சிக்கல்களையும் ஒதுக்கிவிட முடியவில்லை. மதுப்பிரியர்கள் மற்ற நேரங்களில் தவறான இடங்களில் மது வாங்குவதை தவிர்த்து, டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை பயன்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளோம்.
‘டெட்ரா பேக்’குக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 90 மிலி மது விற்பனை குறித்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் உள்வாங்கி, பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவெடுப்போம். அதேநேரம், 90 மிலி மது விற்பனை அரசின் விருப்பமல்ல. வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்றால் அதை கைவிட்டுவிடுவோம்.
மது தொடர்பாக அதிகாரிகள், காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பது சிரமம். கள்ளச்சாராயம் நோக்கி யாரும் செல்வார்களோ என்ற அச்சம் அரசுக்கு இல்லை. அதேநேரம் மது உணர்வுப்பூர்வமானதாக மக்கள் மத்தியில் உள்ளதால் அனைவரிடமும் பேசி முடிவெடுப்போம்.
மதுவுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது இரண்டொரு இடங்களில் நடைபெறுகிறது. அங்கும் நடவடிக்கை எடுக்கிறோம். சமீபத்தில் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மது வாங்க புதிதாக வரும் இளம் வயதினரை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கவுன்சிலிங் அளித்து, அறிவுரை வழங்க முடிவு செய்துள்ளோம். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்க பட்டியல் தயாரிக்க கூறியுள்ளோம். கடைகளின் அளவு 500 சதுரடி அளவில் அமையும் போது, பில் வழங்கும் இயந்திரம் வைக்க முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.