

சென்னை: பல்வேறு வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதமாக வருகின்றன. விமானிகளும் பணி நேரம் முடிந்து ஓய்வுக்குச் சென்று விடுகின்றனர். இதனால் சில விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. சில விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து நேற்று பகல் 11.15 மணிக்கும், மாலை 3 மணிக்கும் மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள், மதுரையிலிருந்து பகல் 1 மணிக்கும், மாலை 4.40 மணிக்கும் சென்னைக்குப் புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்களில் பயணிக்க இருந்த பயணிகள், மாற்று விமானங்களில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதேபோல் நேற்று காலை 6.30 மணிக்கு சென்னையிலிருந்து கொச்சி, காலை 7.30 மணிக்கு சென்னையிலிருந்து திருச்சி, காலை 10.15 மணிக்கு சென்னையிலிருந்து தூத்துக்குடி உள்ளிட்ட 5 விமானங்கள் 2 முதல் 3 மணி நேரம் தாமதமாக சென்றன.