Published : 13 Jul 2023 06:20 AM
Last Updated : 13 Jul 2023 06:20 AM

ராகுல்காந்தி எம்.பி. தகுதி இழப்பு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மவுனப் போராட்டம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருநாவுக்கரசர் எம்.பி., செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: ராகுல்காந்தி எம்.பி. பதவி இழந்த விவகாரத்தில், மத்திய பாஜக அரசைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் எம்.பி. பதவியை இழந்தார். இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராகுல்காந்தி தகுதி இழப்புக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என்று கூறியும், அவரை மத்திய அரசு பழிவாங்குவதாகப் புகார் தெரிவித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான கட்சியினர், எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி, கைதாயினர்.

இதன் தொடர்ச்சியாக. தமிழ்நாடு காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

அதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, நாட்டின் ஜனநாயகத்தையும், எதிர்க்கட்சியின் குரல்களையும் ஒடுக்க, சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

பல மாநிலங்களில், பல்வேறு கட்சிகள் பாஜகவை எதிர்த்தாலும், பாஜகவுக்கு அச்சுறுத்தலாக இருப்பது ராகுல் காந்திதான். அவரைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். மக்களவையில் ராகுல்காந்தி பேசிய 10 நிமிட உரை, பாஜகவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அவர் கூறிய ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகள், நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. எனவே, மீண்டும் ராகுல்காந்தியை உரையாற்ற விடாமல் தடுக்க, பழைய வழக்குகளை கையில் எடுத்து, தனக்கு சாதகமான மாநிலத்தில் தீர்ப்பைப் பெற்று, ராகுல் காந்தியின் எம்.பி. பதவியைப் பறித்துள்ளனர்.

தொடர்ந்து ஜனநாயகப் படுகொலையில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டித்து நாடு முழுவதும் அறவழிப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் அறவழி போராட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விஜய் வசந்த் எம்.பி., துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநிலத் துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, மாநில எஸ்.சி. அணித் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், மாவட்டத் தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x